இந்தியர்களுக்கு நேரடி பாஸ்போர்ட் சேவை
அமீரகம் முழுவதும் உள்ள 16 இந்திய தூதரக சேவை மையங்களில், பாஸ்போர்ட் மற்றும் விசா சேவைகளை குறிப்பிட்ட பிரிவினர் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இச்சேவையை யாரெல்லாம் பெறலாம்?
- பிறந்த குழந்தைகள்
- 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள்
- மாற்றுத்திறனாளிகள்
- தேட்கல் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள்
- அவசரச் சான்றிதழ் (EC) விண்ணப்பதாரர்கள்
காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த சேவை வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வெண்புள்ளிக்கு மாத்திரை வந்தாச்சு
‘Non-Segmental Vitiligo’ என்ற வெண்புள்ளி நோய்க்கான RINVOQ (upadacitinib) என்ற புதிய மாத்திரைக்கு அமீரகம் முதல் நாடாக ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக எமிரேட்ஸ் மருந்து நிறுவனம் (EDE) வெளியிட்டுள்ள அறிவிப்பில், Non-segmental வகை வெண்புள்ளியால் பாதிக்கப்பட்ட 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் பதின்ம வயதினருக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின்படி, இந்த மருந்தை தினமும் ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம்.
‘Black Points-ஐ’ குறைக்க ஓர் அரிய வாய்ப்பு
2026-27ம் கல்வியாண்டுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை முன்னிட்டு, வரும் ஆகஸ்ட் 31ம் தேதி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடாத வாகன ஓட்டுநர்களின் கணக்கில் இருந்து 4 Black Points குறைக்கப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்காக உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாகன ஓட்டுநர்கள் பதிவு செய்ய வேண்டும். மேலும், ஆகஸ்ட் 31ம் தேதி வாகனம் ஓட்டும்போது அதிவேகமாக செல்வது, செல்போன் பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களை தவிர்ப்பதுடன், சாலையை கடக்கும் பாதசாரிகளுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட சாலை பாதுகாப்பு விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
ஈரான் உடனான வர்த்தகம் நிறுத்தம்
ஈரானுடனான அனைத்து வர்த்தகம் மற்றும் வணிகப் பரிமாற்றங்களையும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அமீரகம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 18ம் தேதி அமீரகத்தை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அமீரக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான பதற்றமான சூழலை கருத்தில் கொண்டு, ஈரானுடனான அனைத்து வர்த்தகம், வணிக மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளும் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைபெறுகிறது துபாயின் அடையாளம்
துபாயின் ஷேக் சயீத் சாலையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ‘Toyota Building’ 2027ஆம் ஆண்டில் இடிக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக நிறுவனமான NRL Group உறுதி செய்துள்ளது. தற்போது வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் அங்கு வசித்து வரும் குடியிருப்பாளர்கள், 2026 டிசம்பர் வரை தொடர்ந்து தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த 15 மாடி குடியிருப்புக் கட்டிடம் 1974ஆம் ஆண்டு ‘Nasser Rashid Lootah Building’ என்ற பெயரில் கட்டப்பட்டது. பின்னர், 1981ஆம் ஆண்டு கட்டிடத்தின் கூரையில் பெரிய சிவப்பு நிற Toyota விளம்பரப் பலகை நிறுவப்பட்டது. அதன்பிறகு, இந்தக் கட்டிடம் ‘Toyota Building’ என்ற பெயரில் மக்களால் பரவலாக அழைக்கப்பட்டதுடன், துபாயின் அடையாளங்களில் ஒன்றாகவும் மாறியது.
