செப்டம்பர் முதல் அமீரகத்தில் நிகழவிருக்கும் 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

செப்டம்பர் 2026 தொடங்கும் நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை, போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறையில் பல புதிய மாற்றங்களும், திருத்தங்களும் அமலுக்கு வரவுள்ளன.

1. எதிஹாட் ரயில் சேவை துபாய் வரை விரிவாக்கம்

செப்டம்பர் 30, 2026 அன்று எதிஹாட் ரயில் சேவை துபாய்க்கும் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகின்றன. அபுதாபியின் முகம்மது பின் சயீத் சிட்டி நிலையத்திலிருந்து துபாயின் அல் யலாயிஸ் (Al Yalayis) நிலையத்தை அடைய இனி சுமார் 57 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.  

இதனுடன் ஷார்ஜாவில் உள்ள அல் தைத் ரயில் நிலையமும் திறக்கப்படும்.  நாட்டின் 11 முக்கிய நகரங்களை இணைக்கும் இத்திட்டம் சாலைப் போக்குவரத்து நெரிசலைக் பெருமளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

2. Museum of Future தற்காலிகமாக மூடல்

துபாயின் புகழ்பெற்ற  Museum of the Future  செப்டம்பர் 1 முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது. புதுமையான தொழில்நுட்பங்களுடன் சர்வதேசக் கண்காட்சி அரங்கை அதிநவீன முறையில் மாற்றியமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பெறப்பட்ட 1,000-க்கும் மேற்பட்ட யோசனைகளை அடிப்படையாகக் கொண்டு புதிய பகுதிகள் உருவாக்கப்பட்டு, 2027 முதல் காலாண்டில் அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படும்.

 3. இ-சிகரெட் திரவங்களுக்கான புதிய வரி விதிப்பு

மின்னணு சிகரெட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் திரவங்களுக்கான புதிய கலால் வரி விதியை அமீரக நிதியமைச்சகம் (MoF) அறிமுகப்படுத்தியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் ஒரு மில்லி லிட்டர் திரவத்திற்கு குறைந்தபட்ச கலால் விலையாக AED 1 நிர்ணயிக்கப்படும்.

இதன் மூலம் 10ml பாட்டிலுக்கு AED 10, 30ml-க்கு AED 30 மற்றும் 60ml-க்கு AED 60 என்ற அடிப்படையில் கலால் வரி கணக்கிடப்படும்.  

 4. துபாய் மாலத்தான் நிறைவு பெறுகிறது

கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்ய வசதியாக நடத்தப்பட்ட 3 மாத கால ‘துபாய் மாலத்தான் 2026’ (Dubai Mallathon) நிகழ்வு செப்டம்பர் 15ம் தேதியுடன் முடிவடைகிறது. குளிர்சாதன வசதியுள்ள வணிக வளாகங்களில் மக்கள் இலவசமாக நடைபயிற்சி செய்ய இது வழிவகுத்தது.

 6. இந்தியப் பயணிகளுக்கு போர்டிங் பாஸ் முத்திரை கிடையாது

செப்டம்பர் 1 முதல் இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணம் மேற்கொள்பவர்களின் போர்டிங் பாஸ்களில் குடிவரவு அதிகாரிகள் (Immigration Counters) இனி முத்திரை பதிக்க மாட்டார்கள்.  ஸ்மார்ட்போனில் உள்ள இ-போர்டிங் பாஸை (e-boarding pass) காண்பித்து பயணிகள் விரைவாகச் சென்று விடலாம்.