அமீரகத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீப்ரியா ரங்கநாதன்: NRI தொடர்புகள் மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை

அரசு முறை பயணமாக  ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ள  இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (CPV & OIA) ஸ்ரீப்ரியா ரங்கநாதன்,  நேற்று (செப்.24) அமீரகத்தில் இயங்கி வரும் இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முன்னணி வர்த்தக தலைவர்களைச் சந்தித்து முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்.   

வெளிநாடு வாழ் இந்தியர் தொடர்பு மற்றும் பிரவாசி பாரதிய திவாஸ்:

தனது பயணத்தின் போது, அமீரகத்தில் செயல்படும் பல்வேறு இந்திய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்த செயலாளர், வெளிநாடு வாழ் இந்தியர்களுடனான (NRI) தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார். மேலும், வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ‘பிரவாசி பாரதிய திவாஸ்’ (Pravasi Bharatiya Divas 2027) மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பங்களிப்புகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தக உறவுகள்:

தொடர்ந்து, அமீரகத்தில் உள்ள முன்னணி இந்திய தொழிலதிபர்களைச் சந்தித்துப் பேசிய அவர், இந்தியா – அமீரகம் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும், இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர்களின் பங்களிப்பு மற்றும் முதலீடுகள் குறித்தும் கருத்து பரிமாற்றம் செய்தார்.

காந்தி சிலைக்கு அஞ்சலி மற்றும் மரக்கன்று நடுதல்:

பயணத்தின் ஒரு பகுதியாக, துபாயில் உள்ள இந்தியத் துணை தூதரகத்திற்கு வருகை தந்த ஸ்ரீப்ரியா ரங்கநாதன், அங்கு அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, ‘சேவா பக்வாடா 2026’ (Seva Pakhwada 2026) திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் தூதரக வளாகத்தில் மரக்கன்றும் நட்டு வைத்தார்.