அமீரகத்திற்கு வரும் மற்றும் இங்கு வசிக்கும் இந்தியர்கள் போதிய மருத்துவக் காப்பீடு வைத்திருக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகங்கள் அறிவுறுத்தியுள்ளன.
அமீரகத்திற்குச் சுற்றுலா வரும் அல்லது இங்கு பணிபுரியும் இந்தியர்கள் அனைவரும் போதிய மருத்துவக் காப்பீடு வைத்திருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும், துபாயில் உள்ள இந்தியத் துணைத் தூதரகமும் இணைந்து அறிவுறுத்தியுள்ளன.
அவசர மருத்துவ நிலைமைகள்
சமீபகாலமாக, அமீரகத்தில் திடீரென ஏற்படும் நோய்கள் மற்றும் விபத்துகள் காரணமாக, பல இந்தியர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய மருத்துவக் காப்பீடு இல்லாததால், சிகிச்சைக்கான அதிகப்படியான கட்டணங்களைச் செலுத்த முடியாமல் அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, இந்தியத் தூதரகம் இந்த அவசர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
தூதரகத்தின் முக்கிய வழிகாட்டுதல்கள்
சுற்றுலா பயணிகள் & பார்வையாளர்களுக்கு:
Visit Visa அல்லது Tourist Visa மூலம் அமீரகத்திற்கு வரும் அனைத்து இந்தியர்களும், தங்களது பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னரே தகுந்த மருத்துவக் காப்பீட்டைப் பெற வேண்டும். அந்த காப்பீட்டுத் திட்டம் Cashless Facility வசதியையும், அவசர காலத்தில் மருத்துவ உதவி மூலம் இந்தியாவிற்கு திரும்ப அழைத்துச் செல்வதற்கான (Medical Repatriation) செலவுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அமீரகத்தில் வாழும் பணியாளர்கள் & குடும்பத்தினருக்கு:
Employment Visa மற்றும் Dependent Visa மூலம் அமீரகத்தில் ஏற்கனவே வசிப்பவர்கள், தங்களின் தற்போதைய மருத்துவக் காப்பீடு அமீரகத்தில் ஏற்படும் அனைத்து மருத்துவச் செலவுகளையும் மற்றும் அவசர காலத்தில் இந்தியாவிற்கு நாடு திரும்புவதற்கான செலவுகளையும் முழுமையாக கவர் செய்கிறதா என்பதை உடனடியாக சரி பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
