செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத் துறையில் உலகளாவிய முன்னணியாளராகத் தன்னை நிலைநிறுத்தும் நோக்கில், துபாய் அரசு ‘Create AI Agents Championship‘ என்ற பிரம்மாண்ட உலகளாவிய போட்டியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் AED 2.5 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ₹5.5 கோடிக்கும் அதிகமான பரிசுத் தொகையைக் கொண்ட இப்போட்டி, உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
“சாதாரண மொபைல் செயலிகளை உருவாக்கும் காலகட்டம் கடந்துவிட்டது. இனி மனிதர்களின் அன்றாட நடைமுறைச் சிக்கல்களுக்குச் சுயமாக யோசித்துத் தீர்வு காணும் ‘Agentic AI’ அமைப்புகளை உருவாக்குவதே நமது முதன்மை இலக்கு,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போட்டியில் பங்குபெறப் பிரத்யேகத் தொழில்நுட்பக் கல்வி பின்னணி (Technical Background) தேவையில்லை. நடைமுறைக்குச் சாத்தியமான புதுமையான யோசனைகள் கொண்ட யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
4 முக்கியப் பிரிவுகள் மற்றும் பரிசு விவரங்கள்
பங்கேற்பாளர்கள் பின்வரும் நான்கு பிரிவுகளின் கீழ் தங்கள் கண்டுபிடிப்புகளைச் சமர்ப்பிக்கலாம்:
- சிறந்த சமூக AI ஏஜென்ட் (Best Societal AI Agent)
- சிறந்த தனிநபர் AI ஏஜென்ட் (Best Personal AI Agent)
- சிறந்த வணிக AI ஏஜென்ட் (Best Business AI Agent)
- சிறந்த இளைஞர் AI ஏஜென்ட் (Best Youth AI Agent)
ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் கண்டுபிடிப்புக்கு AED 550,000 பரிசு வழங்கப்பட்டு, அதை வணிக ரீதியாக உருவாக்க ஆதரவு அளிக்கப்படும்.
நான்கு பிரிவு வெற்றியாளர்களில் இருந்து மிகச் சிறந்த ஒரு கண்டுபிடிப்புக்கு ‘AI Agent of the Year’ பட்டம் வழங்கப்பட்டு, அவருக்குக் கூடுதலாக AED 1 மில்லியன் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
‘துபாய் டிஜிட்டல் பொருளாதார சேம்பர்’ (Dubai Chamber of Digital Economy) நடத்தி வரும் ‘Create Apps in Dubai’ என்ற பிரம்மாண்ட முயற்சியின் கீழ் இப்போட்டி நடைபெறுகிறது.
இதுவரை நடந்த 3 பதிப்புகளில் 153 நாடுகளைச் சேர்ந்த 15,564 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 140-க்கும் மேற்பட்ட புதிய செயலிகள் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் நிறைவடைந்த 3-வது பதிப்பின் வெற்றியாளர்களுக்குச் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்க: https://www.dubaichamberdigital.com/en/create-ai-agents
