அமீரகத்தில் விடுதிகள், மால்களில் இசை ஒலிபரப்ப புதிய உரிமக் கட்டணம்; டிசம்பர் 1 முதல் அமல்!

அமீரகத்தில் விடுதிகள், உணவகங்கள், மால்கள், உடற்பயிற்சி கூடங்கள் உள்ளிட்ட வணிக ரீதியான இடங்களில் இசை/பாடல் ஒலிபரப்ப புதிய இசை உரிமக் கட்டணத்தை அரசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

வணிக நோக்கில் இசை அல்லது பாடல்களை ஒலிபரப்பும் உணவகங்கள், ஹோட்டல்கள், மால்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு புதிய உரிமக் கட்டணம் (Licensing Fee) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண முறை வரும் டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி வழங்கப்படும் இசை உரிமம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதன்பிறகு, ஆண்டுதோறும் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

கட்டணத்தில் 10% கலைஞர்களுக்கு

அமீரக பொருளாதார மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘Collective Management in Music Guide’ என்ற புதிய விதிமுறைகளின் கீழ் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு அல்லது தேசிய அளவில் நடைபெறும் வர்த்தக நோக்கமற்ற நிகழ்ச்சிகளுக்கு இந்த உரிமக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

வசூலிக்கப்படும் உரிமக் கட்டணத்தில் 10 சதவீதம், பாடகர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ‘பண்பாட்டு ஆதரவு நிதிக்கு’ (Cultural Support Fund) வழங்கப்படும். இந்த உரிமக் கட்டணங்கள், உரிமம் பெற்ற Music Nation மற்றும் Emirates Music Rights Association ஆகிய அமைப்புகள் மூலம் வசூலிக்கப்படும்.

படைப்பாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை

அமீரகத்தில் புதிய இசை உரிமக் கட்டண முறையை அறிமுகப்படுத்துவது குறித்துப் பேசிய பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அப்துல்லா பின் துக் அல் மர்ரி, காப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளைப் பாதுகாக்கவும், உலகளாவிய தரநிலைகளுக்கு ஏற்ப இசைத் துறையை முறைப்படுத்தவுமே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை படைப்பாளர்களின் உரிமைகளை உறுதியாகப் பாதுகாப்பதுடன், அமீரகத்தின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

TAGGED: