துபாய் லூப் முதல் லாட்டரியில் AED 20 மில்லியன் வென்ற இந்தியர் வரை; அமீரகத்தின் இந்த வார முக்கிய செய்திகள்!

லாட்டரியில் AED 20 மில்லியன் வென்ற இந்தியர்

ஓமனில் வசிக்கும் கர்நாடகாவைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகார் பிக் டிக்கெட் அபுதாபி குலுக்கலில், AED 20 மில்லியன் வென்றுள்ளார். இந்த டிக்கெட்டை சாந்தனு தனது நண்பருடன் இணைந்து வாங்கியதால், இருவரும் இந்தப் பரிசுத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

பிக் டிக்கெட் குழுக்கலில் AED 20 மில்லியன் வென்ற சாந்தனு ஷெட்டிகருக்கு கடந்த டிசம்பர் 27 அன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. தனது மகளின் வருகையே இந்த அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்ததாக சாந்தனு கூறியுள்ளார். வேலை நிமித்தமாக ஓமனில் இருக்கும் இவர், தனது மகளை இன்னும் நேரில் பார்க்கவில்லை.

பெயர் சூட்டும் விழாவிற்கு சொந்த ஊருக்கு செல்லும் போது தான் முதல் முறையாகப் பார்க்க உள்ளார்.  கடந்த 5 ஆண்டுகளாக டிக்கெட் வாங்கி வரும் இவருக்கு முதல் முறையாக தற்போது அதிர்ஷ்ட காற்று அடித்துள்ளது.

துபாய் லூப் கட்டுமான பணிகள் விரைவில் தொடக்கம்!

துபாயில் துபாய் சர்வதேச நிதி மையம் – துபாய் மால் – புர்ஜ் கலீபா  (Dubai International Financial Centre – Dubai Mall –  Burj Khalifa) ஆகிய மூன்று  முக்கிய இடங்களை அதிக வேகப் பயணத்தின் மூலம் இணைக்கும் Dubai Loop போக்குவரத்து சோதனை திட்டத்தின் முதற்கட்ட கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும் என்று துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது. 

எலான் மஸ்கின் Boring Company உடன் இணைந்து, Dubai Loop திட்டத்தின் கட்டுமான பணிகளை RTA விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தம் 24 கி.மீ. நீளத்தில் திட்டமிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின், 6.4 கிலோமீட்டர் நீளமுள்ள முதற்கட்ட கட்டுமான பணிகளுக்கு AED 600 மில்லியன் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகம்

துபாயில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், Glydways என்ற புதிய போக்குவரத்து திட்டத்தை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. இது குறுகிய வழித்தடத்தில் மின்சாரத்தில் தானியங்கி முறையில் இயங்கும்.  

மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் செல்லும் இந்த வாகனத்தில் 4 முதல் 6 பயணிகள் வரை பயணிக்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கி.மீ. வரை செல்லும் திறன் கொண்டது. 

துபாயில் நடைபெறும் உலக அரசாங்கங்கள் உச்சி மாநாட்டில் Glydways என்ற குறுகிய வழித்தடத்தில் செல்லும் புதிய போக்குவரத்து திட்டத்தை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

முதல் பயணிகள் ரயில் வழித்தடங்களை  அறிவித்த எதிஹாத் ரயில்!

அபுதாபி, துபாய் மற்றும் புஜைரா ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில், 400 பயணிகள் வரை பயணிக்கும் முதல் பயணிகள் ரயில் வழித்தடங்களை  எதிஹாத் ரயில் அறிவித்துள்ளது.  

முகமது பின் சையத் சிட்டி (அபுதாபி), ஜூமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் நிலையம் (துபாய்), அல் ஹிலால் சிட்டி நிலையம் (புஜைரா) ஆகியவற்றை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளன.

இந்த ரயில் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பயணிக்கும். ஒரு ரயிலில் சுமார் 400 பேர் வரை பயணம் செய்யலாம். அபுதாபி – துபாய் இடையே  சுமார் 1 மணிநேரமும்,  துபாய் – புஜைரா இடையே  சுமார் 90 நிமிடங்கள் பயண நேரமாக இருக்கும்.

இந்த புதிய சேவையானது அமீரகங்களுக்கு இடையே பயணம் செய்ய நம்பகமான மற்றும் வசதியான ஒரு மாற்றாக அமையும். பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், சாலை நெரிசலைக் குறைப்பதற்கும், வேகமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்கும் இந்த வலையமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுங்க விதிகளில்  மாற்றங்கள் 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு வரி இன்றி எடுத்துச் செல்லும் தங்கத்தின் மதிப்பு வரம்பு நீக்கப்பட்டுள்ளது. இனி, எடை அடிப்படையில் மட்டுமே வரி விதிக்கப்படும்.

ஆண்கள் 20 கிராம் அளவிலான தங்கத்தையும், பெண்கள் 40 கிராம் அளவிலான தங்கத்தையும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு எடுத்து வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு வரி இன்றி எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வரம்பை, ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 

வெளிநாடு வாழும் இந்திய அமைப்புகள் தாயகத்திற்கு தங்கம் மற்றும் பிற பொருட்களை எடுத்து செல்வதற்கான சுங்க விதியை திருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தன. 

இதனை கருத்தில் கொண்டு, இந்த வாரம் இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட 2026‑27 ஆம் ஆண்டுக்கான இந்திய பட்ஜெட்டில் பயணிகள் கொண்டு வரும் தங்க நகைகள் மற்றும் பிற பொருட்களுக்கு சுங்க விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

TAGGED: