ஐக்கிய அரபு அமீரகம் தனது பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கவும், சட்ட திட்டங்களை நவீனப்படுத்தவும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஜூன் 1, 2026 முதல் நாடு முழுவதும் 5 முக்கிய புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.
துபாய் பார்க்கிங் கட்டணம் உயர்வு
ஜூன் 1, 2026 முதல், துபாயில் உள்ள பொது பார்க்கிங் சேவைகளுக்கு 5% மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT – Value Added Tax) விதிக்கப்படும்.
தெருவோர பார்க்கிங், பிரத்யேக வாகன நிறுத்தங்கள், சீசனல் பார்க்கிங் கார்டுகள் மற்றும் பார்க்கிங் பெர்மிட்டுகளுக்கு இந்த 5% வரி பொருந்தும்.
நள்ளிரவு 1 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர பார்க்கிங்கிற்கு வழக்கம் போல் கட்டணம் எதுவும் இல்லை.
சாலிக் (Salik) சுங்கக் கட்டணம் உயர்வு
துபாயின் ‘சாலிக்’ சுங்கச்சாவடி கட்டணங்கள் மற்றும் புதிய டேக் (Tag) ஆக்டிவேஷன் கட்டணங்களுக்கும் 5% VAT வரி விதிக்கப்படும். இந்த வரிப்பணம் சாலிக் கணக்கிலிருந்து தானாகவே கழிக்கப்படும்.
பணமில்லா பார்க்கிங் மீட்டர்கள்
துபாயின் டிஜிட்டல் கொள்கையின்படி, பார்க்கிங் மீட்டர்களில் நாணயங்கள் அல்லது ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி பணம் செலுத்தும் முறை ஜூன் 1, 2026 முதல் நிறுத்தப்படுகிறது.
பின்வருவனவற்றிற்கு டிஜிட்டல் முறையில் மட்டுமே பணம் செலுத்த முடியும்:
நோல் கார்டுகள் (nol cards)
Parkin மொபைல் செயலி (App)
SMS பார்க்கிங் டோக்கன்கள்
Dubai Now, RTA போன்ற அரசு செயலிகள்
சட்டப்பூர்வ வயது 18 ஆக குறைப்பு
புதிய கூட்டாட்சி சட்டத்தின்படி (Federal Decree-Law No. 25 of 2025), அமீரகத்தில் சட்டப்பூர்வமாக ஒரு நபர் முழுப் பருவமடைந்தவராகக் (Adulthood) கருதப்படும் வயது 21-லிருந்து 18 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
18 வயது பூர்த்தியானவர்கள் இனி தங்களின் சொந்த முடிவுகளை சட்டப்பூர்வமாக எடுக்கலாம். 18 வயதினர் தங்களின் வங்கி கணக்குகளை தாங்களே நிர்வகிக்கலாம், சட்டப்பூர்வ ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம்.
இதற்கு முன் இருந்த பாதுகாவலரின் அனுமதி இனி தேவையில்லை.
அதே நேரத்தில், இளம் வயதினர் நிதி ரீதியாக ஏமாற்றப்படுவதைத் தடுக்க சில பாதுகாப்பு சட்டங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள காலக்கெடு (WPS Rules)
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதை முறைப்படுத்தும் WPS (Wage Protection System) விதிகளை மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் (MOHRE) மிகவும் கடுமையானதாக்கியுள்ளது.
கடந்த மாதத்திற்கான சம்பளம், அடுத்த மாதத்தின் முதல் தேதியன்றே வழங்கப்பட வேண்டும். மே மாத சம்பளம் ஜூன் 1-ஆம் தேதிக்குள் வழங்கப்பட வேண்டும். அதற்குப் பிறகு வழங்கப்படும் சம்பளம் ‘தாமதமானது’ எனக் கருதப்படும்.
அனைத்து சம்பளங்களும் WPS அல்லது MOHRE அங்கீகரித்த வங்கி கணக்குகள் மூலமாக மட்டுமே மாற்றப்பட வேண்டும். முதல் தேதியே தராவிட்டாலும், அடுத்த நாளே நிறுவனங்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படாது. படிப்படியாகவே அபராத நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும்.
ஒரு நிறுவனம் தனது மொத்த ஊழியர்களின் சம்பளத்தில் குறைந்தபட்சம் 85 சதவீதத்தை சரியான நேரத்தில் வழங்கிவிட்டால், அந்நிறுவனம் விதிகளுக்கு உட்பட்டு நடப்பதாகக் கருதப்படும். மேலும், ஒரு ஊழியரின் மொத்த சம்பளத்தில் 85% வழங்கப்பட்டு, மீதமுள்ள தொகை சட்டப்பூர்வக் காரணங்களுக்காகப் பிடிக்கப்பட்டிருந்தால், அவருக்கு முழுச் சம்பளமும் வழங்கப்பட்டதாகவே சட்டம் ஏற்கும்.
