துபாய்க்கு வாரீங்களா? மறந்தும்கூட இந்த 6 வித்தியாசமான பொருட்களை கொண்டு வராதீங்க!

துபாய் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? விமான நிலையத்தின் பாதுகாப்பு விதிகளில் ஏற்படும் சிறிய தவறுகள்கூட உங்கள் பயணத்தின் மகிழ்ச்சியைக் கெடுத்துவிடக்கூடும்.

பொதுவாக போதைப்பொருட்கள், கூர்மையான ஆயுதங்கள் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளன என்று நாம் நினைப்போம். ஆனால், நாம் அன்றாட வாழ்க்கையில் சாதாரணமாகப் பயன்படுத்தும் சில வித்யாசமான பொருட்களும் துபாய் விமான நிலையத்தில் தடை செய்யப்பட்டுள்ளன அல்லது கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலான பயணிகள் “இது ஒரு சாதாரணப் பொருள் தானே, இதனால் என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது?” என்ற எண்ணத்திலேயே இத்தகைய பொருட்களைத் தங்கள் பைகளில் எடுத்துச் சென்று இறுதியில் சோதனையின் போது சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். இதனால் தேவையற்ற தாமதங்கள், அபராதங்கள் அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். எனவே, உங்கள் துபாய் பயணம் தடையின்றி இனிதாக அமைய, புறப்படுவதற்கு முன்பே துபாய் விமான நிலையத்தின் லக்கேஜ் விதிகளைச் சரியாகத் தெரிந்து கொண்டு பயணிப்பது மிகவும் அவசியமாகும்.

துபாய் விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட 6 வித்தியாசமான பொருட்கள்

அளவிடும் டேப் (Measuring Tape) 

சாதாரணமாக நாம் பயன்படுத்தும் Measuring Tape ஆபத்தான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ள பொருளாகக் கருதப்படுக்கிறது. எனவே, இதனை உங்கள் கேபின் பேக்கில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.

விளையாட்டு உபகரணங்கள் 

கிரிக்கெட் பேட், ஸ்கேட்போர்டு, மீன்பிடி தூண்டில் போன்ற விளையாட்டுப் பொருட்களை பாதுகாப்பு காரணங்களுக்காகக் கையடக்கப் பைகளில் கேபின் பேக்கில் கொண்டு செல்ல முடியாது.

பொம்மை ஆயுதங்கள் 

குழந்தைகள் விளையாடும் பொம்மைத் துப்பாக்கிகள், வில்-அம்பு, மற்றும் டார்ட்ஸ் (Darts) போன்ற உண்மையான ஆயுதங்களைப் போன்று காட்சியளிக்கும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் விமான நிலைய பாதுகாப்புக் குழுவினரால் பறிமுதல் செய்யப்படலாம்.

இறைச்சி வகைகள் 

அமீரகத்திற்குள் ஹலால் அல்லாத இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி வகை உணவுப் பொருட்களைக் கொண்டுவரக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில குறிப்பிட்ட மருந்துகள் 

சில மருந்துகள் அமீரகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் பட்டியலில் உள்ளன. இவற்றை எடுத்துச் செல்ல வேண்டுமானால், அமீரக சுகாதார அமைச்சகத்தின் (MoHAP) முன் அனுமதி மற்றும் தகுதியான மருத்துவரின் சான்றிதழ் அவசியம்.

கசகசா 

இந்தியச் சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கசகசா, அமீரகத்தில் போதைப்பொருளாகக் கருதப்பட்டு முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைந்த அளவில் வைத்திருந்தாலும் கூட கடுமையான சட்ட நடவடிக்கை பாயும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

TAGGED: