கோடையில் எகிறும் மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க DEWA வழங்கும் எளிய வழிமுறைகள்!

கோடை காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏசி (AC) பயன்பாட்டினால் மின்சாரக் கட்டணம் அதிகமாகுவதைக் குறைக்கவும், பணத்தை மிச்சப்படுத்தவும் துபாயின் மின்சார மற்றும் நீர் ஆணையம் (DEWA) எளிய வழிமுறைகளை வழங்கியுள்ளது.  

24°C அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை அமையுங்கள்

ஏசியின் வெப்பநிலையை எப்போதும் 24°C அல்லது அதற்கு மேல் வைப்பதே மிகச் சிறந்தது. ஏசி வெப்பநிலையை ஒவ்வொரு டிகிரி (1°C) உயர்த்தும்போதும், ஒட்டுமொத்த மின் நுகர்வில் 5% வரை சேமிக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வெளியே செல்லும்போது ஏசியை முற்றிலும் அணைக்காதீர்கள்

வீட்டை விட்டு வெளியே செல்லும்போது ஏசியை முற்றிலும் அணைப்பதற்குப் பதிலாக, 24°C முதல் 26°C வரை அமைத்து விட்டுச் செல்வது நல்லது. ஏசியை முழுமையாக அணைத்தால் அறையில் ஈரப்பதம் அதிகரித்து பூஞ்சை உருவாக வாய்ப்புள்ளது. மேலும், திரும்ப வந்ததும் அறையைக் குளிர்விக்க ஏசியை மிகவும் குறைந்த வெப்பநிலையில் இயக்கும்போது அதிக மின்சாரம் விரயமாகும்.

மின் விசிறி மற்றும் ஏசியை இணைத்துப் பயன்படுத்துங்கள்

ஏசியின் வெப்பநிலையை 1 அல்லது 2 டிகிரி உயர்த்தி வைத்துவிட்டு, அத்துடன் மின்விசிறியையும் இயக்கினால் அறை முழுவதும் குளிர்ந்த காற்று சீராகப் பரவும். இது மின் கட்டணத்தை பெருமளவு குறைக்க உதவும்.

ஜன்னல் மற்றும் கதவுகளை மூடவும்

ஏசி இயங்கும்போது அறையின் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை எப்போதும் மூடி வைப்பது அவசியம். இது குளிர்ந்த காற்று வெளியேறுவதைத் தடுத்து, அறையின் குளிர்ச்சியை நீண்ட நேரம் தக்கவைக்கும்.

ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் 

ஸ்மார்ட் தெர்மோஸ்டாட் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம், அறையின் வெப்பநிலையையும் ஏசி இயங்கும் நேரத்தையும் துல்லியமாகக் கட்டுப்படுத்த முடியும். இது தேவையில்லாத மின்சார விரயத்தைத் தடுக்கும்.

ஏசி பில்டர்களை சுத்தம் செய்யுங்கள்

ஏசியின் செயல்திறன் குறையாமல் இருக்கவும், மின் நுகர்வைக் குறைக்கவும் மாதத்திற்கு ஒருமுறையாவது அதன் பில்டர்களைச் சுத்தம் செய்வது மிகவும் அவசியம்.

DEWA செயலியைப் பயன்படுத்துங்கள் 

வெளியூர் அல்லது நீண்ட தூரப் பயணங்கள் செல்லும்போது, DEWA செயலி மூலம் Away Mode-ஐ ஆன் செய்து கொள்ளலாம். இதன் மூலம் வீட்டின் மின்சாரம் மற்றும் நீர் பயன்பாட்டை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். 

மேற்கூறிய எளிய நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடைகாலத்திலும் உங்கள் ஏசி மின் கட்டணத்தைக் பெருமளவில் குறைக்க முடியும்.