உலக அளவில் விமான பயணங்களின் போது உடமைகள் தொலைவது பெரும் கவலையாக இருக்கும் வேளையில், துபாய் சர்வதேச விமான நிலையம் செக்-இன் பேக்குகளை தொலையாமல் கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது.
துபாய் விமான நிலையத்தின் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரே நாளில் 50,000-க்கும் அதிகமான உள்ளூர் பயணிகளின் செக்-இன் பேக்குகள் ஒரு சிறு தவறு கூட இல்லாமல் வெற்றிகரமாகக் கையாளப்பட்டுள்ளன.
DXB Zero Week
விமான நிலையத்தில் பதிவு செய்யப்படும் ஒவ்வொரு பயணியின் உடமையும், அவர்கள் பயணிக்கும் அதே விமானத்தில் எந்தவித தாமதமும் இன்றி சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் ‘DXB Zero Week’ என்ற சிறப்பு செயல்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் 24 மணி நேரத்தில் 50,000 பைகள் எந்தவித தவறும் இன்றி கையாளப்பட்டு புதிய மைல்கல் எட்டப்பட்டது.
இந்த சிறப்பு வாரத்தில் மொத்தம் 250,000-க்கும் அதிகமான உடமைகள் கையாளப்பட்டன. அவற்றில் வெறும் 7 பைகள் மட்டுமே தவறவிடப்பட்டன அல்லது தாமதமாகின. இதன் மூலம் 99.996% என்ற அசாதாரண வெற்றி விகிதம் பதிவாகி, சர்வதேச விமானப் போக்குவரத்து துறையின் சராசரி தரநிலைகளையும் விஞ்சியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல மில்லியன் உடமைகளைக் கையாளும் துபாய் விமான நிலையத்தின் இந்தச் சாதனைக்கு, விமான நிறுவனங்கள், தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் மற்றும் சேவை நிறுவனங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடே முக்கிய காரணமாகும். மேலும், உடனுக்குடன் தகவல்களை வழங்கும் அதிநவீன கணினி அமைப்புகள் மற்றும் கட்டுக்கோப்பான செயல்முறைகளும் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளன.
தொடர் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி
இந்த மைல்கல் திடீரென நிகழ்ந்ததல்ல, விமான நிலைய ஊழியர்களின் தொடர்ச்சியான உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். கடந்த 2025ஆம் ஆண்டில், துபாய் விமான நிலையம் அதன் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 86.75 மில்லியன் உடமைகளைக் கையாண்டு புதிய சாதனை படைத்தது. அதே ஆண்டில், 1,000 பயணிகளுக்கு சராசரியாக வெறும் 2.47 பைகள் மட்டுமே தவறான இடத்திற்குச் சென்றன என்ற உலகத்தரம் வாய்ந்த செயல்திறனையும் பதிவு செய்தது. மேலும், விமானம் தரையிறங்கிய 45 நிமிடங்களுக்குள் 92% பயணிகளிடம் அவர்களது உடமைகள் ஒப்படைக்கப்பட்டதும், அதன் சிறப்பான செயல்பாட்டிற்கு மற்றொரு சான்றாக அமைந்தது.
